ஏழு தமிழர்கள் உள்பட அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்!

ஏழு தமிழர்கள் உள்பட அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்!


Views: 60 Date: 2 day(s) ago
சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமையகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (செப்.24) பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச் செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீது, அச.உமர் பாரூக், மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், அபுபக்கர் சித்திக், மாநில பொருளாளர் வி.எம்.அபுதாஹிர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.ரஃபீக் அகமது, முகமது பாரூக் ஆகியோர் கலந்துகொண்டனர். பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியதாவது; பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்திருக்கிறது. ஒட்டுமொத்த தமிழகத்தின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய பரிந்துரைத்துள்ளது. ஆனால், ஏழு தமிழர்களையும் விடுவிக்க தேவையான ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று கூறி தமிழக ஆளுநர் தனது ஒப்புதலை அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றார். ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவின்படி ஆளுநருக்கு தமிழக அமைச்சரவையால் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் இந்த பரிந்துரையை எந்த காரணத்தைக் கூறியும் நிராகரிக்க முடியாது. ஆகவே, தமிழக ஆளுநர் விரைவாக ஏழு தமிழர்களின் விடுதலைக்கு ஒப்புதலை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் 10 ஆண்டு ஆயுள் தண்டனை கழித்த முஸ்லிம் சிறைவாசிகளும் நீண்டநாள் சிறைவாசம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விடுதலை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு முந்தய ஆண்டுகளில் அவர்களின் விடுதலை மறுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டு தமிழக அரசால் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்ட போதும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை மறுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்திலும் ஆளுநரின் தலையீடு உள்ளதாக கூறப்படுகிறது. குற்றங்களை பார்த்து விடுதலை செய்வதல்ல, குற்றவாளியை பார்த்து விடுதலை செய்வதுதான் மன்னிப்பு. ஆகவே, நீண்ட நாள் சிறைவாசம் அனுபவித்த 10 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும், ஜாதி, மதம் பாராமல் பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டும். சிறைவாசிகளை கருணையுடன் பரிசீலித்து அவர்களின் நன்னடத்தை அடிப்படையில், அவர்களின் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு அவர்களை விடுதலை செய்ய முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.