சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டம் – பல இடங்களில் படக் காட்சிகள் ரத்து

சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டம் – பல இடங்களில் படக் காட்சிகள் ரத்து


Views: 19 Date: 2 day(s) ago
கலாநிதிமாறன் தயாரித்து இயக்குநர் முருகதாஸின் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளி வந்துள்ளது. இந்த திரைப்படத்தில் உள்ள சில வசனங்கள் மற்றும் காட்சிகளில் புரட்சித்தலைவி அம்மாவை இழிவுப்படுத்தும் வகையில், அமைந்துள்ளது. அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று சர்கார்பட குழுவுக்கு அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அம்மாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சர்கார் படத்தில் காட்சிகள் இடம் பெற்றிருப்பதை அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் கடுமையாக விமர்சித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர்.காமராஜ், மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சர்ச்சைக்குரிய பட காட்சியை நீக்காவிட்டால் நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ், பட தயாரிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சர்கார் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கழகத்தினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். மதுரை அண்ணாநகரில் உள்ள சினிப்பிரியா தியேட்டரில் மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் கழகத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் புதூர் துரைப்பாண்டி, சி.தங்கம், ஜெ.ராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய கழக துணை செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், மோகன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் துணை மேயர் கு.திரவியம், பகுதி கழக செயலாளர்கள் அண்ணாநகர் முருகன், பி.எஸ்.கண்ணன் மற்றும் வக்கீல் ஈரோடு சாமி உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கழகத்தினர் தியேட்டர் உரிமையாளர்களிடம் சர்ச்சை காட்சியை நீக்கும் வரை சர்கார் படத்தை திரையிட வேண்டாம் என்று வலியுறுத்தினர். இதையடுத்து மதுரையில் உள்ள சினி பிரியா, தமிழ் ஜெயா, சரஸ்வதி உள்ளிட்ட தியேட்டர்களில் சர்கார் பட மதியம் முதல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இது குறித்து வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அரசியலுக்கு கமல், ரஜினியை போன்று நடிகர் விஜய் வருவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அவருடைய சமீப கால திரைப்படங்களில் சில விஷமிகளின் தூண்டுதலின் பேரில் அரசுக்கு எதிரான வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம் பெறுகின்றன. சமீபத்தில் வெளியாகியுள்ள சர்கார் திரைப்படத்தில் புரட்சித்தலைவி அம்மா வழங்கிய விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றினை எரித்து வன்முறையை தூண்டும் வகையில் காட்சி இடம் பெற்றுள்ளது. புரட்சித்தலைவி அம்மாவின் பெயரை கொச்சைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அவரது இயற்பெயரை உச்சரித்து இதன் மூலம் அம்மாவை களங்கப்படுத்தி உள்ளனர். திமுக ஆட்சிக்காலத்தில் கேபிள் டி.வி. மூலமாக கொள்ளையடித்து மட்டுமல்லாது தொலைதொடர்பு துறையிலும் ஊழல் செய்துள்ள மாறன் சகோதரர்கள் தயாரித்த சர்கார் திரைப்படத்தில் கருணாநிதி வழங்கிய கலர் டி.வி.யை உடைத்தது போல் காட்சி அமைக்கவில்லை. முழுக்க முழுக்க அம்மாவின் பெயரை களங்கப்படுத்தும் அளவில் இதை செய்துள்ளார்கள். அதுமட்டுமல்லாது இயக்குநர் முருகதாசும், நடிகர் விஜய்யும் அரசிற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை திரைப்படத்தில் கூறியுள்ளனர். அம்மாவின் திட்டங்களை களங்கப்படுத்துவதன் மூலம் கழகத்தில் மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழகமே கடுங்கோபத்தில் உள்ளது. கலாநிதிமாறனை கைது செய்ய வேண்டும் என்று இங்கு உள்ள கழகத்தினர் கூறி வருகின்றனர். தற்போது நாங்கள் வன்முறையை தூண்டாத வகையில் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். எனவே சர்கார் படத்தில் உள்ள அம்மாவை களங்கப்படுத்தும் வகையில் உள்ள காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். அதுவரை திரைப்படத்தை ஓட்ட வேண்டாம் என்று தியேட்டர் உரிமையாளர்களிடம் கூறியுள்ளோம். அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள். இவ்வாறு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார். சென்னையிலும் சர்கார் படத்தை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர், கே.கே.நகர் காசி தியேட்டர் முன்பு கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் சர்கார் திரைப்படத்தை தடைசெய்யக்கோரி கோவை மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.சசிக்குமார் தலைமையில் கோவை சாந்தி திரையரங்கம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் பப்பாயா ராஜேஷ், காந்திபுரம் பகுதி மாணவரணி செயலாளர் கமலக்கண்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட நிர்வாகிகள் ரியாஸ்கான் அருண் கிஷோர், அர்ஜுன், மற்றும் கழக நிர்வாகிகள் கேபி.எஸ்.ராஜா, ஆட்டோ அன்சர், பாலமுரளி, அமான், சரவணபொஹரா, சாய் ஷியாம், நாட்டாமை சகா, சதீஷ், பிரபு, வேணு, மணிகண்டன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதையடுத்து மாநகர் காவல்துறை ஆணையாளரிடம் சர்க்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்ககோரி புகார் மனு கொடுத்தனர். திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சர்க்கார் படம் ஓடும் சீனிவாச திரையரங்கம் முன்பு கழகத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவாசி நகர செயலாளர் ஓட்டல் பாஷா தலைமை தாங்கினார். உடன் ஒன்றிய செயலாளர்கள் அர்ஜீணன், லோகேஷ்வரன், நகர பேரவை செயலாளர் மேகநாதன், தர்மதுரை, ராஜேஷ்குமார், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சர்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கழகத்தினர் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.