திருவண்ணாமலையில் 23-ந்தேதி தீபத் திருவிழா – மின்னொளியில் ஜொலிக்கும் ஆலயம்…

திருவண்ணாமலையில் 23-ந்தேதி தீபத் திருவிழா – மின்னொளியில் ஜொலிக்கும் ஆலயம்…


Views: 20 Date: 2 day(s) ago
தீபத் திருவிழாவை தொடங்குவதற்கு முன்பாக, திருவண்ணாமலை நகரின் காவல் தெய்வ வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, நவம்பர் 11-ந்தேதி இரவு துர்கையம்மன் உற்சவமும், 12-ந்தேதி இரவு பிடாரியம்மன் உற்சவமும், 13-ந்தேதி இரவு விநாயகர் உற்சவமும் நடைபெறுகிறது. நவம்பர் 14-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் துலா லக்கினத்தில் கோயில் தங்க கொடிமரத்தில் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து, தினமும் காலை, இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் முதல் நாளான நவம்பர் 14-ந் தேதி காலை வெள்ளி விமானங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா, இரவு 8 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அருணாசலேஸ்வரர், ஹம்ச வாகனத்தில் பராசக்தியம்மன், சிம்ம வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். வெள்ளித் தேரோட்டம் 19-ந்தேதி இரவு நடைபெறுகிறது. 20-ந்தேதி பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் விருட்சிக லக்கினத்தில் விநாயகர் தேரோட்டம் தொடங்குகிறது. தொடர்ந்து, முருகர் தேர், அருணாசலேஸ்வரர் தேர், பராசக்தியம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என பஞ்ச ரதங்களின் தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான தீபத் திருவிழா 23-ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது. விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் செய்து வருகின்றன.