சபரிமலை செல்லும் பக்தர்கள் மற்றும் ஊடகத்தினரை கேரள அரசு தடுக்கக் கூடாது – கேரள உயர்நீதிமன்றம்

சபரிமலை செல்லும் பக்தர்கள் மற்றும் ஊடகத்தினரை கேரள அரசு தடுக்கக் கூடாது – கேரள உயர்நீதிமன்றம்


Views: 11 Date: 2 day(s) ago
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதி வழங்கி, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்களும், விஷ்வ இந்து பரிசத் உள்ளிட்ட இந்துத்வா அமைப்பைச் சேர்ந்தவர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் அய்யப்பன் கோவில் நடை 6 நாள்கள் திறந்திருந்தபோது, போலீஸ் பாதுகாப்புடன் சில பெண்கள் கோயிலுக்கு செல்ல முயன்றனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில், சித்திரை திருநாள் ஆட்ட விசேசம் என்ற விழாவுக்காக, அய்யப்பன் கோயில் நடை, இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படவுள்ளது. இதில் பங்கேற்று, அய்யப்பனை தரிசனம் செய்வதற்காக, இன்று அதிகாலை முதலே நிலக்கல் பகுதியில் பக்தர்கள் கோவிலை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளனர். முன்னதாக, இலவங்கல், நிலக்கல், பம்பை, மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதோடு, 2 ஆயிரத்து 300க்கு மேற்பட்ட போலிசார், 20 பேர் கொண்ட கமாண்டோ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சன்னிதானம் பகுதியில் 50 வயதுக்கு மேற்பட்ட 15 பெண் போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நிலக்கல் பகுதியில் வாகனங்களை கடும் சோதனைக்கு உட்படுத்தும் போலீசார், பக்தர்கள் பாதசாரிகளாகவே சபரிமலைக்கு அனுமதிக்கப்படுவர் என கூறியுள்ளனர். இதனிடையே, சன்னிதானம் பகுதியில் ஆகம விதிகளை மீறி, பெண்களை அனுமதித்தால், நடை உடனடியாக சாத்தப்படும் என்று மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மிரட்டல் விடுத்துள்ளார். சபரிமலை செல்லும் பக்தர்களையோ ஊடகத்தினரையோ தடுத்து நிறுத்தக் கூடாது என கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், சபரிமலை கோவிலின் அன்றாட நடவடிக்கைகளில் கேரள அரசு தலையிடக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரில் சம்மந்தப்பட்ட போலீசார் மீது துறைரீதியான விசாரணை நடத்தவும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது