சபரிமலையில் 144 தடை உத்தரவு 6-வது முறையாக நீட்டிப்பு

சபரிமலையில் 144 தடை உத்தரவு 6-வது முறையாக நீட்டிப்பு


Views: 8 Date: 2 day(s) ago

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 16-ந்தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது.

 

சபரிமலை கோவிலில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள், அரசியல் கட்சியினர், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்துவதால் நடை திறந்த முதல் நாளில் இருந்தே சபரிமலையில் 144 தடை உத்தரவு போடப்பட்டது.

 

அங்கு தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் 144 தடை உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. சபரிமலையில் 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும், ஐயப்ப பக்தர்களிடம் போலீஸ் கெடுபிடியை கைவிட வேண்டும் என்று கோரி கேரள சட்டசபை வளாகத்தில் காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் தொடர் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அதேபோல பா.ஜனதா சார்பில் கேரள அரசு தலைமை செயலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் நடந்து வருகிறது. கேரள சட்டசபையிலும் இந்த பிரச்சினையை கிளப்பி எதிர்க்கட்சிகள், ரகளையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சபையை நடத்த முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

மேலும் இந்து அமைப்புகளும் 144 தடை உத்தரவை கைவிடக்கோரி போராட்டம் நடத்தி வருகிறது. நேற்று காங்கிரசின் இளைஞர் அமைப்பினர் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும், இளைஞர் காங்கிரசாருக்கும் மோதல் ஏற்பட்டது.

அவர்களை போலீசார் அங்கிருந்து விரட்டியடித்ததால் பரபரப்பு நிலவியது. ஆனாலும் சபரிமலையில் 144 தடை உத்தரவை அரசு வாபஸ் பெறவில்லை. இந்த நிலையில் 6-வது முறையாக வருகிற 16-ந்தேதி வரை சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பத்தனம் திட்டா கலெக்டர் பிறப்பித்துள்ளார்.

சபரிமலையில் பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. மண்டல பூஜைக்கு 2 வாரங்களே உள்ள நிலையிலும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகவே காணப்படுகிறது.

இதன் காரணமாக சபரிமலை கோவில் உண்டியல் வருமானம், பிரசாதங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவை தொடர்ந்து குறைந்து வருகிறது.