நாடாளுமன்றத் தேர்தலை மனதில்கொண்டே 10% இட ஒதுக்கீடு : ரா.சரத்குமார் கண்டனம்

நாடாளுமன்றத் தேர்தலை மனதில்கொண்டே 10% இட ஒதுக்கீடு : ரா.சரத்குமார் கண்டனம்


Views: 19 Date: 2 day(s) ago
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் இன்று வெளியிட்ட அறிக்கையில்:- நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சாதி அடிப்படையில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு இருந்துவரும் நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் உயர்சாதி(பொதுப்பிரிவு)யினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா நாளை தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்த இடஒதுக்கீடு 50%க்கும் மிகக்கூடாது என்னும் உச்சநீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில், அரசியல் சாசனம் பிரிவு 15 மற்றும் 16ல் தகுந்த மாற்றங்கள் செய்ய, அரசியல் சாசன சட்ட திருத்த மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாகவேண்டும். பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தரப்படவேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்துவரும் நிலையில், தற்போது மத்திய அரசு முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், ஆட்சிப் பொறுப்பில் இருந்த நான்கே முக்கால் ஆண்டுகளில் இத்தகைய முடிவை எடுக்காமல், நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்கு இன்னும் சுமார் 3 மாத காலமே இருக்கும் நிலையில் இந்த முடிவை எடுத்திருப்பது, பொருளாாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினரின் மீதான அக்கறையைவிட, தேர்தல் அரசியலால் கிடைக்கும் ஆதாயமே பாஜகவிற்கு இருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டி இருக்கிறது. அதிலும், சமீபத்தில் நடந்துமுடிந்த 3 மாநிலத் தேர்தல் தோல்வி ஏற்படுத்திய அச்ச உணர்வு, பாஜகவை ஓட்டு வங்கி அரசியலைக் கையிலெடுக்க வைத்திருக்கிறது என்பதும் தெளிவாகிறது. ரஃபேல் விவகாரம், மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளால் நாடாளுமன்ற அவைகள் முடங்கியிருப்பதைத் திசைதிருப்பும் முயற்சியாகக் கூட, இத்தகைய அவசர முடிவை பாஜக அரசு எடுத்திருக்கலாம். மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர்வோம் என்ற நம்பிக்கையும், மனஉறுதியும் இருந்தால், இந்த அவசர மசோதாவை நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்குப் பிறகான கூட்டத்தொடரில் கொண்டுவரலாமே என்ற கருத்தை பிரதமர் மோடியிடம் முன்வைக்கிறேன் என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.