அண்ணாநகரில் தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

அண்ணாநகரில் தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை


Views: 7 Date: 2 day(s) ago

அண்ணாநகர், எல்.பிளாக், 1-வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் சத்யநாராயணன். இவர் பெரம்பூரில் இருசக்கர வாகன விற்பனை ஷோரூம் வைத்துள்ளார்.

 

இவருடைய மனைவி, ஸ்ரீதேவி. கணவன்-மனைவி இருவரும் ஆந்திர மாநிலத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு சென்றனர். இந்த நிலையில் வீட்டு வேலையாட்கள், தோட்டத்தில் உள்ள செடிகளை பராமரிக்க கேட் கதவை திறந்து உள்ளே சென்றனர்.

அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அண்ணாநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பீரோவில் இருந்த 100 சவரன் நகை, ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கைக்கடிகாரம், ரூ.1லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது.

மேலும் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் சேதப்படுத்தி எடுத்து சென்றுள்ளனர். அங்கிருந்த மற்றொரு லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த நகை-பணம் தப்பியது.

இதுபோல், அதே பகுதி 26 -வது தெருவில் வசித்து வருபவர் முரளிகிருஷ்ணன். நேற்று இரவு அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார்.

நள்ளிரவில் வந்த கொள்ளை கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களை கொள்ளை அடித்து தப்பினர்.

அண்ணாநகர் எல் பிளாக் 21-வது தெருவில் மேக்ஸ் ப்யூர் வாட்டர் விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது. நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் நிறுவனத்தின் பூட்டை உடைத்து அங்கிருந்த ரூ.5 லட்சம் ரொக்கப்பணத்தை சுருட்டினர். மேலும் கண்காணிப்பு கேமராவையும் உடைத்து கொண்டு சென்று விட்டனர்.

அண்ணாநகரில் அடுத்தடுத்து 3 இடங்களில் நகை-பணம் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.