ஸ்டாலினின் கிராமசபை கண்துடைப்பு நாடகம் – துணை முதலமைச்சர் கடும் தாக்கு…

ஸ்டாலினின் கிராமசபை கண்துடைப்பு நாடகம் – துணை முதலமைச்சர் கடும் தாக்கு…


Views: 7 Date: 2 day(s) ago

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கண்துடைப்பு நாடகம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி அமையும். தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். கூடிய விரைவில் ஒரு நல்ல முடிவு எட்டப்படும். கழகத்தில் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு. அந்த வகையில் என்னுடைய மகனும் தேர்தலில் போட்டியிட மனு அளித்துள்ளார். கழகத்தின் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிக்கை விடுத்திருக்கிறோம். அந்த அடிப்படையில் அவர் மனு அளித்திருக்கிறார்.

கூட்டணி உறுதியான பின்பு நாங்கள் எத்தனை தொகுதிகளில் போட்டியிட இருக்கிறோம் என்று அறிவிப்போம். உறுப்பினர் கார்டு வழங்கும் பணி 78 சதவீதம் முடிந்து விட்டது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் கார்டுகள் வழங்கப்படும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இருமாநிலங்களுக்கு நடுவே ஓடும் நதிகளின் மேலே இருக்கின்ற மாநிலங்கள் அணைகள் மற்றும் தடுப்பணைகள் கட்டுவதாக இருந்தால் கீழே இருக்கின்ற மாநிலங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று உள்ளது. அதை மீறி அணைகள் கட்டப்பட்டால் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு பெற வேண்டும். அந்த அடிப்படையில் பல்வேறு வழக்குகளில் அம்மா அரசு நல்ல தீர்ப்புகளை பெற்றுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானது. ஆனால் கேரளா மாநிலத்தில் உள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்துள்ளது. முல்லை பெரியாறு அணையின் ஒப்பந்தத்தின்படி அதன் உயரத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று இருக்கிறது. மேலும் பேபி அணை, சிற்றணை ஆகிய அணைகளை பழுதுநீக்கம் செய்து 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இதுகுறித்து கேரளா அரசுடன் பேசி அவர்களின் அனுமதி பெற்று பணிகள் தொடங்க முடிவு செய்துள்ளோம். இதற்கு அவர்கள் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். இதனை கேரளா அரசு தவிர்க்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி நடந்து கொள்வது தான் கேரளா அரசுக்கு நல்லது. கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்காது என்று ஓ.பன்னீர்செல்வம் சொன்னாரே? இப்போது அவர் மகன் தேர்தலில் போட்டியிட மனு செய்துள்ளார் என்று என்னை பற்றி டி.டி.வி.தினகரன் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

அம்மா அவர்கள் உயிரோடு இருந்த போது சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர் 16 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார். இதனைத் தொடர்ந்து அம்மா அவர்களிடம் சசிகலா வருத்தம் தெரிவித்த காரணத்தினால் அம்மா அவர்கள் சசிகலாவை சேர்ந்து கொண்டார். பின்னர் என்னால் நீக்கப்பட்ட 15 பேரும் நீக்கியது நீக்கியது தான் என்று அம்மா அவர்கள் கழகப் பொதுக்குழுவில் வெளிப்படையாக பேசினார். இன்று வரை அந்த நிலைதான் நீடிக்கிறது.

நான் தர்மயுத்தம் ஆரம்பித்த பின்னர் கட்சியையும், ஆட்சியையும் தினகரன் குடும்பம் கபளீகரம் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது. புரட்சித் தலைவர் இந்த இயக்கத்தை தொண்டர்கள் இயக்கமாகத்தான் ஆரம்பித்தார். தொடர்ந்து அம்மா இந்த இயக்கத்தை மாபெரும் இயக்கமாக தொண்டர்களின் இயக்கமாக வளர்த்தார். அம்மா அவர்களால் நீக்கப்பட்ட தனிப்பட்ட குடும்பம் தினகரன் உள்ளிட்ட இவர்கள் கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்யும் சூழல் காரணமாகத் தான் நான் தர்மயுத்தம் நடத்தினேன். இப்படி நான் அந்த குடும்பத்தை பற்றித்தான் கூறினேனே தவிர வேறு யாரையும் கூறவில்லை.

தகுதி இருந்தால், திறமை இருந்தால் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் ஏற்றுக் கொண்டால் அவர்கள் அரசியலில் நீடிப்பார்கள். ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக ஜனவரி 23-ம்தேதி சம்மன் அனுப்பினார்கள். அன்று உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றால் ஆஜராக முடியவில்லை. அதற்கு பிறகு விசாரணையை தள்ளி வைத்தார்கள். இது எனக்கு தெரியாது. எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் உண்மை நிலையை நான் தெரிவிப்பேன்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் பேட்டியளிக்கையில் ஸ்டாலின் கிராமசபை கூட்டம் நடத்துவதை கடுமையாக விமர்சித்தார்.

ஸ்டாலின் கிராமசபை கூட்டம் நடத்துவது ஒரு கண் துடைப்பு நாடகம். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது இதுபோல் கிராமசபை கூட்டம் நடத்தாதது ஏன்? தேர்தலுக்காகவே அவர் இப்படி ஒரு நாடகம் ஆடுகிறார் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.