ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி : பட்ஜெட்டில் அறிவிப்பு…

ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி : பட்ஜெட்டில் அறிவிப்பு…


Views: 7 Date: 2 day(s) ago

ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:- 

சமுதாயத்தில் அனைத்துப் பிரிவினரும் குறைந்த செலவில், தரமான உயர்கல்வி பெறுவதை உறுதிசெய்வதற்கான முக்கியத்துவத்தை இந்த அரசு தொடர்ந்து அளித்து வருகிறது. மூன்று பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளை 2018-2019-ம் கல்வி ஆண்டில் அரசு நிறுவியுள்ளதுடன், 29 சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் தொடங்கவும் அனுமதி வழங்கியுள்ளது. 2019-2020-ம் ஆண்டில், ராமேஸ்வரத்தில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவியருக்கு கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்கும் திட்டத்திற்காக 2019-2020-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 460.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேசத் தரத்திற்கு கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுள் ஒன்றாக, தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவும் சட்டங்களை அரசு இயற்றி சிவசுப்ரமணிய நாடார் பல்கலைக்கழகம், சாய் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு தனியார் பல்கலைக்கழகங்களை அரசு அனுமதித்துள்ளது.

அரசுக் கல்லூரிகளில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்படுவதுடன், 10 மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் 65 அரசுக் கல்லூரிகளில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, இதுவரை 269.36 கோடி ரூபாய், தேசிய உயர் கல்வித் திட்டத்தின் கீழ் செலவிடப்படுள்ளது. இதேபோன்ற முயற்சிகளை தேசிய உயர்கல்வி இரண்டாம் திட்டத்தின் கீழ் மேற்கொள்வதற்காக 382 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பு நல்கைத் தொகைகளில் 20 வருடங்களுக்குப் பின்னர் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 250 கோடி ரூபாய் உட்பட, பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு 538.10 கோடி ரூபாய் தொகுப்பு நல்கைத் தொகையாக இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர் தொழில்நுட்பத் திறன்களும் சிறப்புத் தகுதிகளும் கொண்ட பணியாளர்களுக்கான தேவை உலக அளவில் வளர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, தொழிற் கல்லூரிகளில் உள்ள வசதிகளை சர்வதேசத் தரத்திற்கு தொடர்ந்து மேம்படுத்துவது அவசியமாகிறது. எனவே, மாநிலத்தின் முதன்மையான பல்கலைக்கழகமான

அண்ணா பல்கலைக்கழகத்திலும், தொழில்நுட்பக் கல்வி ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளிலும் சர்வதேசத் தரத்தில் கற்பித்தலுக்குத் தேவைப்படும் உபகரணங்கள் உள்ளிட்ட அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உயர்கல்வித் துறைக்காக 4,584.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.